நீஈஈஈஈஇண்ட நாட்களாகப் பதிவு ஏதும் போடாமல் ஒரே காடு மண்டிக்கிடக்குது, எனவே மீண்டும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் கணக்காக அவியலோடு வந்திருக்கிறேன்.
அவுஸ்திரேலியாவில் நாடு தழுவிய ரீதியில் இந்த வாரத்தோடு இரண்டாயிரத்தைத் தொடப்போகும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு புறமிருக்க, பணியிடங்களில் சற்றுத் தும்மினாலே பின்லாடனைப் பார்ப்பது போல் வெறிக்கும் அளவுக்கு இந்த நோய் குறித்த கிலி கிழவிக்கு அம்மன் வந்த கணக்காகப் போட்டு உலுப்புகின்றது. தும்மல், சளி, இருமல் நீடித்தால் அலுவலகப் பக்கம் வராதீர்கள், பள்ளிக்கும் பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று நோட்டீஸ் ஒட்டும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கும் இந்த நிலையில் இன்று மேற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 26 வயது இளைஞன் இந்த நோய் கண்டு இறந்த முதல் நோயாளியாக இங்கு பதிவாகி இருக்கின்றார். மேலும் வாசிக்க
சிட்னியில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று இருக்கும் நூலகமான தமிழ் அறிவகம் நாளை யாழ் நூலக எரிப்பு நினைவாக வருடாந்தம் நடாத்தும் கொடித்தின நிகழ்வை நடத்த இருக்கின்றது. இதுகுறித்த மேலதிக விபரம் அறிந்து கொள்ளவும், சிட்னியில் இருப்போர் இப்படி ஒரு நூலகம் இருப்பதே இப்போது தான் தெரியும் என்று உரிமை பாராட்டவும் இதோ நோட்டீஸ்
MX என்ற பெயரில் மாலை நேரத்தில் ஒரு தினப்பபத்திரிகை வருகிறது இங்கே. ஓவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும் போது காலில் விழுந்தாவது வாங்கிக் கொண்டு போங்கோ என்று கெஞ்சுவாங்கள் பேப்பர் கொடுக்கிறவங்கள். ஓசி ஆச்சே ஒன்றுக்கு இரண்டாவும் வாங்கலாம். இங்கே சிட்னியில் குறைந்தது 50 போராட்டங்களாவது ஈழத்தமிழர் குறித்து நடந்திருக்கும், ஓவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதும் வேறு விஷயம். இந்த நிகழ்வுகளை எல்லாம் படம் பிடிக்காமல் செய்தி போடாமல் கள்ளக்காதலில் இருந்து விலாவாரியாக எல்லாக் குப்பையும் போடுறாங்களே என்ற ஆதங்கத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களைப் படம் எடுத்து செய்தியாகவும் கொடுத்திருக்கினம், ஒப்புக்கு ஒன்றை தேமோ என்று போட்டு விட்டு திரும்பவும் கள்ளக்காதல், புட்போல் என்று பழைய குருடி கதவத் திறவடி கணக்காய் சுழலும் இந்தப் பேப்பர் நேற்று ஒரு வரலாறு படைத்திருக்கிறது. பாலிவூட் குமரிகள் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் பெஸ்டிவலுக்கு போன காட்சியில் எந்தக் குமரியின் பிளவுஸ் அழகு என்று இரண்டு பக்கப் போட்டோ மழை பொழிந்து ஜென்ம சாபல்யம் கண்டது.
Peter Costello முந்திய லிபரல் கட்சி அரசில் நிதியமைச்சராக (treasurer) 11 வருஷங்கள் (1996 - 2007) வரை இருந்து கடைசிவரையும் பிரதமர் ஜோன் ஹாவார்ட் அண்ணன் திண்ணை எப்போது காலியாகும் என்று ஏங்கி இறுதிவரை அந்தப் பாக்கியம் கிட்டாமல் அடுத்த ரவுண்டில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது லிபரல் கட்சியின் எதிர்க்கட்சி ஆசனம், சீ சீ இந்தப்பழம் புளிக்கும் கணக்காய் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தவர். எதிர்க்கட்சித் தலைவர் Malcolm Turnbull வயிற்றில் பால்வார்க்கும் கணக்காய் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் அரசியலில் இருந்தே ஒதுங்கப் போகிறேன் என்று சொல்லும் இவருக்கு வயசு வெறும் 51 தான், அடுத்த பிறவியிலாவது 84 வயசு வரைக்கும் பதவியில் இருக்க இவர் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.
வருது வருது இந்தா வருது என்று அடிக்கடி வெருட்டிக் கொண்டே இருக்கும் பொருளாதார வீழ்ச்சி அப்படியொன்றும் அமெரிக்கா கணக்காய் அவுஸ்திரேலியாவில் தாக்கவில்லை. ஆனாலும் வேலையிடங்களில் இதைச் சாக்காக வைத்து களையெடுப்புக்கள் நடப்பது தவிர்க்க முடியாத விஷயம் (ஆளாளுக்க்கு மேசைக்கு கீழ் ஒளிஞ்சிருக்கணும் போல). ஆனாலும் வருமுன் காப்போம் (வந்த பின்னால் தவிப்போம்)கணக்காய் எமது அவுஸ்திரேலிய பிரதமர், வருடச்சம்பளத்தில் ஒரு எல்லைக்கு குறைவான சம்பளம் பெறுவோருக்கு 900 அவுஸ்திரேலிய டொலர்களைக் கொடுத்து ஏதாவது வாங்குங்கள் என்று ஏழை பாழைகளைக் குளிர்வித்தார் என்று பார்த்தால் பாடையில் போனவனையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த உபகாரப்பணம் பல்லாயிரம் இறந்து போன அவுஸ்திரேலியக் குடிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்காம் மேலும் படிக்க
ஆனாலும் ஒன்று தேர்தல் எல்லாம் முடிஞ்சு ஒரு வருஷத்துக்குப் பிறகு இவர் இந்த உபகாரத்தைக் கொடுத்தார், கையில காசு பாலெட்டில் (ballot ) ஒட்டு என்ற கணக்காய் இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறோம்.
இப்படியான உபகாரத்தால் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கெவின் ரட் அரசு நன்றாகக் கையாளுக்கின்றது என்று மிஸ்டர் பொதுஜனம் கருத்துக்கணிப்பொன்றில் அள்ளி அள்ளி வாக்குச் சொல்லியிருக்கு.
ஆனாலும் இந்த மனுஷனுக்கு அஷ்டமத்துச் சனி போல, இவரது சொந்த மாநிலத்தில் இருக்கும் கார் வாங்கி விற்கும் ஒருவருக்கு சலுகை காட்டியது என்ற புகாரில் அவரை இந்தக் குளிரிலும் ட்ரவுசரை உருவுகிறார்கள் எதிர்க்கட்சிக் கோமகன்கள். மேல் விபரங்களுக்கு
இவர்களை தமிழகத்துக்கு அழைத்துச் சென்று அரசியல் அறிவு புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரதமர் கெவின் ரட்டின் சாதகத்தை டி.ராஜேந்தரின் குறள் டிவியில் காட்டுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். குறள் டிவியின் துல்லியமான சாதகத்துக்கு ஒரு சோறு பதம்
நாளை ஐ.நா சபையினால் உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுகின்றதாம், ஹாஹாஹா என்னால சிரிப்பை அடக்க முடியல. இந்த ஜோக்கை கேட்டு சிரிச்சுக் கிட்டே இருங்க அடுத்த அவியல் வரை என்று கேட்டுக் கொண்டு விடைபெறுவது ;-)
சிட்னியின் வைகாசிக்குன்றில் (Mays Hill) எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று சிறப்பாக ரதோற்சவ நிகழ்வு நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்த இந்தப் பெருவிழாவிற்கு வருண பகவானும் மெல்ல ஒதுங்கி வழிவிட, சூரியன் தன் மத்திம வெப்பத்தைக் கொடுக்க, வாயு பகவான் ஏஸிக்காற்றை மெல்ல மிதக்கவிட்டது இந்தப் பக்திச் சூழ்நிலைக்கு மேலும் அணி சேர்த்தது.
இந்த நிகழ்வின் முக்கியமான சில காட்சிகளை என்னோடு வந்திருந்த கமராப் பெட்டி களவாடி உங்கள் முன் ஒப்புவிக்கின்றது இதோ
தேரோட்டத்துக்கு முன் ஆலயத்தின் வசந்த மண்டபத்துள்ளே நிகழும் பூசை புனஸ்காரங்கள் சுவாமி உள் வீதி வலம் அடிவாங்கக் காத்திருக்கும் தேங்காய் கூட்டம்
ஆலயத்தின் ஒருபக்க வீதி, ஆலயத்தின் உள்ளே சென்று வழிபடமுடியாதவர்களுக்கு இந்தப் பக்கம் இருந்து உள்ளே நடப்பதைப் பார்க்க வசதி தேர் ஏற வரும் வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமான்
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே முருகா ஆட்டத்திலே நேற்று இரவு ஓடிக் களைத்து ஒதுங்கி நிற்கும் சப்பரம் மோரும், சர்பத்தும் கலந்துனக்கு நான் தருவேன் ஈழத்தில் இருந்து வந்த நாகேந்திரன், அமரர் தட்சண மூர்த்தி மகன் உதயசங்கர் குழுவினர் தேரோட்டம் காண வாருங்கள்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் பக்தர் கூட்டம், ஆறிலிருந்து அறுபது வரை ஆங்கே வயிற்றுக்கும் கூட ஈயப்படும் இருப்பிடம் வந்த தேரில் இருக்கும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கியூ கட்டி நிற்கும் கூட்டம் இது சாப்பாட்டு கியூ
சுவாமிக்கு பச்சை சாத்தி ஆற்றுப்படுத்தல் இத்தோடு முடிந்தது, கூட்டம் கலையலாம் :)
உலகின் கிழக்கு மூலையில் அமைந்திருப்பது புதிய நாளை மற்றவர்களுக்கு முதல் நியுசிலாந்து மற்றும் பசிபிக் தீவுவாசிகளோடு சேர்ந்து புதிய நாளை வரவேற்க வசதியாக அமைகிறது. சிட்னியின் வாணவேடிக்கை வரவேற்பு உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கருப்பொருள் வைத்திருப்பார்கள். இந்த முறை 'படைப்பு'.
இரண்டு நேர வாணவேடிக்கைகள் நடக்கும் . ஒன்பது மணிக்கொன்று. நள்ளிரவொன்று. ஒன்பது மணிக்கு நடப்பது சிறுவர்கள் குடும்பத்தார் பார்க்க என்றுதான் முக்கியமாக.
நகருக்குள் வந்து வாணவேடிக்கை பார்க்க என்றே கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் வருவார்கள். கண் நிறைய வாணவேடிக்கையும், மனம் நிறையச் சந்தோசமும், கொஞ்சம் நிறைவெறியுமாகத் (நிறவெறி அல்ல) தள்ளாடி எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி கலைந்து போவார்கள்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்க் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு பரிசுகள் பெற்ற 14 தமிழ்க் குறும்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவையாவும் எம் தமிழ் இனத்தின் வாழ்வியலின் குறியீடுகளாக அமைந்துள்ளன.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரும் தவறாது பார்க்க வேண்டிய படங்கள் இவை. வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கலைஞர்கள் செதுக்கிய குறும்படங்களை ஒரு கலையாகவும், தொழிலாகவும் மேம்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய மண்ணிலும் முதல்முறையாய் அறிமுகப்படுத்தப்படும் இவ்விழா, வருடா வருடம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக பாரிஸில் வாழும் ஈழத்து நாடத் திரைக் கலைஞர் என்.ரகுநாதனும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.
விழாவினால் சேர்க்கப்படும் இலாபம் முழுமையாக, இலங்கை அரசின் கோரப் போரினால் வன்னியில் இடம் பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Paint for Peace "A picture is worth a thousand words"
Lend us a hand. Join us and paint for hope and peace for our Tamil brothers and sisters in the NorthEast.
Aim: - To show our people back home who are a suffering on a daily basis that we have not forgotten them. - To express our image of peace for the Tamils through a different form ?ART! - To work together to create a beautiful product that symbolises what we can achieve if we work together hand in hand. - To organise an event where people of all ages can participate?and you don't have to be artistic! You can even write a simple message of hope or leave your hand print.
துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம். கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம். எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம். நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டால் அழகிய வாசகங்களைத் தாருங்கள். அல்லது உங்கள் கரங்களை வர்ணக் கலவையில் தோய்த்துப் பதிய வையுங்கள்.
எங்கள் தாயக உறவுகளுக்காகக் கரம் கோர்க்க வாருங்கள்.
சிட்னியில் காலம்: நவம்பர் சனிக்கிழமை 22ம் நாள்
நேரம்: பிற்பகல் 3:00 – 6:00
இடம்: உங்கள் விருப்பம
Homebush - Homebush Public School, Rochester St, Homebush
Wentworthville - Darcy Road Public School, Darcy Rd, Wentworthville
Mt Druitt - Colyton Public School, Nelson St, Mt Druitt
மெல்போனில்
காலம்: நவம்பர் கனிக்கிழமை 22ம் நாள்
நேரம்: பிற்பகல் 4:30 – 7:00
இடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna
ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும்.
நாளை ஆகஸ்ட் 28 இல் சிட்னியின் CINEMA PARIS இலும் வரும் செப்டெம்பர் 3 முதல் மெல்பனிலும் இந்தியப் பட விழா ஆரம்பமாகின்றது.
பாலிவூட் மசாலா அயிட்டங்களோடு, எப்போதும் பார்க்கத் தகும் வங்காளப் படைப்பாளி சத்யஜித்ரேயின் பின்வரும் திரைப்படைப்புக்களும் காண்பிக்கப்பட இருக்கின்றன.
PATHER PANCHALI
APUR SANSAR ( The World of Apu)
DEVI
GHARE- BAIRE (Home And The World)
JALSAGHAR (The Music Room)
மேலும் பிராந்திய மொழி வரிசையில் காண்பிக்க இருக்கும் திரைப்படங்கள் இவை, (தமிழில் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
AMI, IYASIN AR AMAR MADHUBALA (The Voyeurs)- Bengali
DHARM - Hindi
KADA BELADINGALU- Kannada
RATHRI MAZHA- Malayalam
TINGYA- Marathi
இந்த நிகழ்வை MG gdistribution என்னும் ஒரு தனியார் அமைப்பே முன்னின்று நடாத்துகின்றது என்றாலும் கிடைத்தற்கரிய சத்யஜித் ரேயின் படங்களை பெரு வெண் திரையில் காண இதுவோர் அரிய வாய்ப்பாகும்.
நீண்ட நாட்களாக இந்த வலைப்பதிவில் ஒன்றும் எழுதாமல் புல் பூண்டு முளைச்சிருக்கு ;-) எனவே முடிந்தவரை வாராந்த அவுஸ்திரேலிய நடப்பு செய்திகளைப் பதிவோம் என்றிருக்கிறேன்.
யூன் 8 ஞாயிற்றுக்கிழமை யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையால் நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சிக்குப் போனேன். நான் யாழ் இந்து இல்லை, என்னைப் போலவே பலரும் அப்படியே. கலாசூரி அருந்ததி சிறீரங்க நாதனின் மகன் சாரங்கனின் இசை நெறியாள்கையில் இந்த வருசத்தோடு மூன்றாவது தடவையாக "கீதவாணி" விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விண்ணப்பித்த பலரில் வடிகட்டி மூன்று வகையான வயதுப் பிரிவினரை உள்ளடக்கிய போட்டி இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் என்று பிரிக்காமலே தேர்வு இருந்தது. சும்மா சொல்லக்கூடாது சோக்கான நிகழ்ச்சி அது. மேலும் விபரங்களும் படங்களும் தமிழ் சிட்னி இணையத்தில்
ரிக்கற் விலை $25 ஏன் உந்த விலை எண்டு கேட்ட கொக்குவில் இந்துக்காரருக்கு "அது பிராண்ட் நேமுக்கு (Brand name) விலை கூட " என்றார் யாழ் இந்துக்காரர். (ஸ்ஸ்ஸ்யப்பா.... இப்பவே கண்ணக் கட்டுதே) கூட்டம் ஆயிரத்தை தொட்டு மண்டபத்துக்கு வெளியிலும் நின்றது. தாமதமாக வந்து இருக்கை இல்லாமல் வெளியில் குளிரில் நின்றவர் தனக்கு ரிக்கற் விற்றவரைத் தேடிக் கொண்டிருந்தார்.
************************************************************* இந்த வார முற்பகுதியே விடுமுறை நாளாக இருந்ததால் கடந்த வாரம் ஒரு நீண்ட வாரமாக இருந்தது. இங்கிலாந்து மகாராணியாரின் பிறந்த நாளைக்கு இங்கே விடுமுறை. நிறையப் பேருக்கு எதற்காக விடுமுறை கிடைத்ததென்றே தெரியாது. வாகனங்களில் குறித்த எல்லைக்கு மேல் ஓடுபவர்களுக்கு இரட்டிப்பு மடங்கு புள்ளிகளை லைசன்ஸில் இருந்து இழக்கும் தற்காலிக நடைமுறை கடந்த வியாழனில் இருந்து திங்கள் வரை அமுலில் இருந்தது. அப்படியும் வீதி விபத்துக்களும், மரணங்களும் நிகழ்ந்தன.
****************************************************************** கடந்த வெள்ளிக்கிழமை நியூசவுத்வேல்ஸ் மாநில கல்வி அமைச்சர் Della Bosca வும் அவர் மனைவி Belinda Neal (இவர் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்) நண்பர்கள் சகிதம் சிட்னியில் உள்ள Iguanas Waterfront restaurant என்ற களிப்புறும் உணவகம் சென்று Belinda Neal அங்குள்ள ஓட்டல் சிப்பந்திகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனர். மாநிலக் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து Della Bosca வை தற்காலிகமாக இடை நிறுத்தி பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துள்ளைக்க நியூசவுத்வேல்ஸ் மாநில முதல்வர் Morris Iemma கட்டளை இட்டிருக்கிறார். பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி, எதிர்க்கட்சி எல்லாவற்றுக்குமே அவல், சுண்டல் கிடைத்த திருப்தியில் இந்த அமைச்சரையும் பாரியாரையும் வெளுத்து வாங்குகிறார்கள். இதுபோதாதென்று இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களும் இந்த அமைச்சரும் மனைவியும் அடிக்கடி சண்டைபோடுவதாக புகார் கொடுத்து விட்டார்கள். எல்லா நாட்டிலும் மேர்வின் சில்வா மாதிரி அமைச்சர் இருக்க முடியுமே?
***************************************************** Toyota கார் நிறுவனம் 35 மில்லியன் டொலர்களை அரச உதவிப்பணமாகப் பெற்று இங்கே hybrid car என்னும் கார்களை 2010 இலிருந்து தயாரிக்கவுள்ளது. அதிகரித்த பெற்றோல் விலையை சமாளிக்கும் ஒரு உபாயமாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் கொண்டு வந்த திட்டம் இது. இவர் ஏற்கனவெ கன்னாபின்னாவென்று ஓவ்வொரு நாளும் விலையை ஏற்றும் பெற்றோலிய நிறுவனங்களைக் கண்காணிக்கும் குழுவொன்றை ஒரு சில மாதம் முன்னர் அமைத்தார். சீமான் ஆரம்பிச்ச நேரமோ தெரியவில்லை பெற்றோலிய விலை முன்பை விட சுனாமியாக ஏறிவிடவும், எதிர்க்கட்சிகளின் கத்தலில் இருந்து தப்பவே இப்போது ஹைபிரைட் கார் ஓட்டிக் காட்டுகிறார்.
தசாவதாரம் படக் காய்ச்சல் இங்கேயும் கடந்த வாரம் முதல் அடிக்கத் தொடங்கிவிட்டது. மூன்று டொலருக்கு மூன்று படம் உள்ள டிவிடி வாங்கிப் பார்த்தால் போதும் என்கிறவையும் படம் பார்க்கவேணும் எண்டு முந்தியடிக்கினம். ஒரு ரிக்கெட் 18 டொலர் போகுது. இன்றிலிருந்து வார இறுதி முழுதுமே எல்லாக் காட்சியுமே பதிவு செய்யப்பட்டுட்டுதாம், கலரியில் முதல் வரிசை உட்பட.
அவுஸ்திரேலிய-நியுசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக 1915ம் ஆண்டு அமைக்கப்பட்ட படையணியின் பெயரே அன்ஸாக். (Australia and New Zealand Army Corps) 1915ம் ஆண்டு கலிபொலி மீட்பு வெளியேற்றத்துக்கும் பிறகு இப்படையணி கலைக்கப்பட்டாலும் ANZAC என்ற பெயர் நிலைத்தது. இந்தப் படையணியின் முதலாவது போரின்/தாக்குதலின் ஞாபகார்த்தமாகத்தான் அன்ஸாக் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. அவுஸ்திரேலியாவிலும் நியுஸிலாந்திலும் முக்கிய (விடுமுறை) தினம். 1914ம் ஆண்டு முதலாம் உலகப் போர் தொடங்கிய போது கலிப்பொலி குடாநாட்டைக் கைப்பற்றி நேச நாட்டுப் படைகளுக்கு கருங்கடற் பிரதேசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக நேச நாடுகளின் கூட்டணிப் படையில் ஒரு பகுதியாக அன்சாக் படையினர் அமைந்தனர். இஸ்தான்புல்லைப் பிடிப்பதும் ஒரு திட்டமாக இருந்தது. ஜேர்மனிக்கு ஆதரவாக இருந்த துருக்கியின் படையினரின் தாக்குதலுக்கு மத்தியில் 1915ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி கடல் வழியாக அன்ஸாக் படையணியினர் பிழையான கடற்கரையில் கரையிறங்கினர். வேறு சில பகுதிகளிலும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன. அன்சாக் படையினரின் கலிப்பொலி தாக்குதல் பற்றி ஏலவே தகவல் கிடைத்து துருக்கப்படையினர் ஆயத்தமாக இருந்தமையால் இத்தாக்குதல் பலனளிக்காமல் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நீடித்தது. 8000 அவுஸ்திரேலிய மற்றும் 2000 நியுஸிலாந்து வீரர்களும் சாவைத் தழுவினர்.
(படம்:கலிபொலியிலுள்ள லோன் பைன் இடுகாடு) இவ்வீரர்களின் உயிரிழப்புப் பற்றிய செய்தி முதல் முறையாகக் கிடைத்ததும் ஏப்ரல் 30ம் திகதி அரைநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. 1916ம் ஆண்டு முதல் ஏப்ரல் 25 அவர்களது உயிர்த்தியாகத்தை ஞாபகிக்கிற நாளாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கும் வழக்கம் அவுஸ்திரேலியா-நியுஸிலாந்தில் உருவானது. அதிகாலை நேரத்து விழித்திருப்புகளும் சடங்குகளும் அணிவகுப்புகளும், reunionsகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் என்பனவும் two-up விளையாட்டும் அன்ஸாக் தினத்துக் கலாச்சாரக்கூறுகளாகும். (two-up என்பது இரு நாணயங்களை மேலெறிந்து தலையா பூவா என அவற்றின் முடிவின் மேல் பந்தயம் கட்டுவது)
படங்கள்: சிட்னியிலுள்ள அன்ஸாக் நினைவாலயம் & அதனுள்ளிருக்கும் வாள் மீது உயிர் துறந்த வீரன் சிலை
அவுஸ்திரேலியா-நியுஸிலாந்து பங்கு கொண்ட பிற்காலப் போர்களில் போரிட்ட வீரர்களையும் உள்வாங்கி கொண்டாடும் முகமாக அன்ஸாக் தினம் மாறியுள்ளது. அன்ஸாக் தினத்தைக் கொண்டாடும் வகையில் கலிப்பொலிக்குச் செல்வதும் அங்கு நடக்கும் அதிகாலைப் பிரார்த்தனையில் கலந்து கொளவதும் வழக்கமாக இருக்கிறது.
அன்ஸாக் தினத்தன்று கடைப்பிடிக்கப்படும் மௌன நிமிடங்களின் இறுதியில் பின்வரும் அஞ்சலிக் கவிதை கூறப்படும்: They shall not grow old as we are left that grow old Age shall not weary them, Nor the years condemn At the going down of the sun and in the morning we will remember them. "Lest we forget"
ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு.
சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி.
ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna (நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே அடக்கினார்கள்.
1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.
இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.
இவர்களைத் தான் ‘Stolen Generations’ அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.
அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக இருந்திருக்கின்றது.
இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க நினைத்தது இது தான்:
1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் முறைமை "பூர்வ குடிகள்" என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.
2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்
இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். சில பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் காட்சிப்படுத்தியிருக்கின்றது.
இன்று வரை தமது கலாச்சார வேர்களைத் தொலைத்தும், இயல்பு வாழ்வைத் தொலைத்தும் தற்கொலை, போதைக்கு அடிமையாதல் மன அழுத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள், என்று திசைமாறிய கங்காருக்கள் ஆகிவிட்டனர் இந்தச் சமுதாயத்தவர்.
காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? தொடர்ந்த நூற்றாண்டுக் கொடுமைகளுக்கு எல்லை போடுமாற் போல மனித உரிமைவாதிகள், மற்றும் பூர்வகுடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல் வேகவேகமாக, இன்னும் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.அதன் பலனாகத் தோன்றியதே 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த Bringing them Home’ என்ற விசாரணை நிகழ்வு.Federal Attorney-General, Michael Lavarch என்பவரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பூர்வகுடிகளைப் பிரித்தெடுத்துச் சின்னாபின்னப்படுத்திய வரலாற்றின் சாட்சியமாக 700 பக்க அறிக்கையில் 26 மே 1997 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பூர்வகுடித் தலைமுறை ஒன்றுக்கு நிகழ்ந்த பல கோரமான உண்மைகளை ஆவணப்படுத்தியது. இந்த ஆவணப்பிரகாரம் 54 பரிந்துரைகளை வழங்கியிருந்ததும் அதில் மூன்று முக்கிய பரிந்துரைகளாவன:
2. பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு Van Boven பரிந்துரைத்த மனித நேயச் செயற் திட்டப்பரிந்துரைகளின் படி புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். ( Wikipedia: Theo van Boven (born 1934) is a Dutch jurist and professor emeritus in international law.In 1977 he was appointed director of the United Nations' Division for Human Rights. From 1986 to 1991, he was the UN's Special Rapporteur on the Right to Reparation to Victims of Gross Violations of Human Rights and, from 2001 to 2004, Special Rapporteur on Torture)
3. அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.
இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய மாநிலப் பாராளுமன்ற முதல்வர்கள் இவ்வாறு தம் அனுதாபத்தையும், பொதுமன்னிப்பையும் விடுத்திருந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ்
"apologises unreservedly to the Aboriginal people of Australia for the systematic separation of generations of Aboriginal children from their parents, families and communities" - Mr Bob Carr, Premier of New South Wales, 18 June 1997
விக்டோரியா
"That this House apologises to the Aboriginal people on behalf of all Victorians for the past policies under which Aboriginal children were removed from their families and expresses deep regret at the hurt and distress this has caused and reaffirms its support for reconciliation between all Australians" - Mr Jeff Kennett, Premier of Victoria, 17 September 1997
மேற்குறித்த மாநிலங்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலப் பாராளுமன்றுகள் தமது முந்திய வழித்தோன்றல்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றன.
ஆனால் அப்போது பிரதமராக இருந்த Mr John Howard, 26 August 1999 Motion of Reconciliation என்ற அடிப்படையில் "deep and sincere regret that indigenous Australians suffered injustices under the practices of past generations, and for the hurt and trauma that many indigenous people continue to feel as a consequence of those practices." என்று தமது அரசின் சார்பிலான அறிக்கையை விடுத்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகம் "unreserved apology" அதாவது எல்லை கடந்த மன்னிப்பாக இருக்க வேண்டும் என்று அப்போதய எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த தொழிற்கட்சித் தலைவர் Kim Beazley இன் எண்ணம் அப்போது நிறைவேறாது போயிற்று.
கடந்த 24 நவம்பர் 2007 நீண்டதொரு வனவாசத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட Kevin Rudd தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியாக "சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பை" இந்தத் திருடப்பட்ட சமுதாயத்துக்குக் கொடுப்பது என்று வாக்களித்தது. தற்போதய அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இந்தச் சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பு எப்படி அமையவேண்டும் என்று பூர்வகுடிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கின்றார். இவ்வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன் கிழமை, அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றில் வைத்து காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.
இந்த அரசு இப்படியானதொரு செயற்பாட்டில் இறங்கியிருப்பது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் வெறும் வெற்றுக் காகித மன்னிப்புக்கள் அடுத்த தேர்தலுக்கான வாக்கு வங்கிக்கான முதலீடாக மட்டுமே அமையும். உளப்பூர்வமான, நேர்மையான அரசாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொலைந்த தலைமுறைக்கு நிரந்தரமான இழப்பீட்டுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடவே அமெரிக்காவின் அடியாளாக இருந்து மற்றைய நாடுகளின் இறைமைக்குள் மூக்கை நுளைத்து அவுஸ்திரேலியா எல்லை கடந்த நாடுகள் மீதான எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தி அந்தந்த நாடுகளில் நிமிஷத்துக்கு நிமிஷம் திருடப்பட்டு வரும் மனித உரிமைகளையும் காக்க முன்வர வேண்டும். இவையெல்லாம் செய்தால் மன்னிப்பே தேவையில்லை, மண்டியிட்டு வணங்குவார்கள் அம்மக்கள்.
அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இன்று பாராளுமன்றத்தில் கோரிய பொதுமன்னிப்பின் ஒளிப்பகிர்வு
பிரதமரின் இந்தச் சம்பிரதாயபூர்வ மன்னிப்புக் கேட்டலில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இவை தான்:
"Today we honour the Indigenous peoples of this land, the oldest continuing cultures in human history.
"We reflect on their past mistreatment.
"We reflect in particular on the mistreatment of those who were stolen generations - this blemished chapter in our nation's history.
"The time has now come for the nation to turn a new page in Australia's history by righting the wrongs of the past and so moving forward with confidence to the future.
"We apologise for the laws and policies of successive Parliaments and governments that have inflicted profound grief, suffering and loss on these our fellow Australians.
"We apologise especially for the removal of Aboriginal and Torres Strait Islander children from their families, their communities and their country.
"For the pain, suffering and hurt of these stolen generations, their descendants and for their families left behind, we say sorry.
"To the mothers and the fathers, the brothers and the sisters, for the breaking up of families and communities, we say sorry.
"And for the indignity and degradation thus inflicted on a proud people and a proud culture, we say sorry.
"We the Parliament of Australia respectfully request that this apology be received in the spirit in which it is offered as part of the healing of the nation.
"For the future we take heart; resolving that this new page in the history of our great continent can now be written.
"We today take this first step by acknowledging the past and laying claim to a future that embraces all Australians.
"A future where this Parliament resolves that the injustices of the past must never, never happen again.
"A future where we harness the determination of all Australians, Indigenous and non-Indigenous, to close the gap that lies between us in life expectancy, educational achievement and economic opportunity.
"A future where we embrace the possibility of new solutions to enduring problems where old approaches have failed.peA future based on mutual respect, mutual resolve and mutual responsibility.
"A future where all Australians, whatever their origins, are truly equal partners, with equal opportunities and with an equal stake in shaping the next chapter in the history of this great country, Australia."
உசாத்துணை மற்றும் படங்கள்: International Herald Tribune: www.iht.com Wikipedia: www.wikipedia.org European Network for Australian rights: www.eniar.org www.news.com.au/